Blogroll

Monday, July 25, 2011

அம்மா என்பவள் காத்திருப்பவள்


நினைவுகள் எல்லாம்

சரியாக இருக்கும் பட்சத்தில்

அம்மா என்பவள்

மெலிந்த தேகமும்

கந்தலான உடையும் அணிந்தவள்

சமையல் பாத்திரங்களுக்கு முன்பு

வியர்வை துடைப்பவள்

நெருப்பை சீராக வளரவிடுபவள்

அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டுபோய்

ஆற்றிலே அலசுபவள்

அவை உலரும் நேரத்தில்

கரையோரக் காடுகளில் நட்ட

யூகலிப்டஸ் கன்றுகளுக்கு நீர் வார்ப்பவள்.

நினைவுகள் எல்லாம்

சரியாக இருக்கும் பட்சத்தில்

அம்மா என்பவள்

வயலில் விளைந்த காய்கறிகளை

கூடைகளில் விற்பவள்

மீந்தவற்றை உப்பு சேர்த்து உலர வைப்பவள்

நள்ளிரவுவரை

பொட்டல்களில் அறுத்த

உளுந்தம்பயறுகளை

திருவைகளில் வைத்துத் திரிப்பவள்

அம்மா என்பவள்

குழந்தைகளை உறங்கவைத்து

கணவனுக்குக் காத்திருப்பவள்

மூன்றாம் ஜாமத்தில்

பணிவிடைகள்போல் சிலவற்றை

தன் கணவனுக்கு செய்ததை

பிள்ளைகள் அறிந்த பின்னும்

வெட்கமற்ற அதிகாலையில்

ஊறவைத்த தானியங்களின் மேல்

உலக்கை குத்துபவள்

நினைவுகள் எல்லாம்

சரியாக இருக்கும் பட்சத்தில்

அம்மா என்பவள்

வறுத்த கம்பு மாவரைத்து

உலர்ந்த ஈசல்களில் கருப்பட்டி தூவி

கலந்து தருபவள்

உமிகள் கட்டிய துணியை

சூடாக்கி ஒத்தடம் தருபவள்

அம்மா என்பவள்

பணியாரம் சுட்டவள்

வடித்த சுடுகஞ்சியில்

தனது கணவனது வேட்டியை முக்கி எடுப்பவள்

பொதுவில் அழியவிட்ட

குளத்து மீன்களை உளசுபவள்

சேவற்கட்டில் ஜெயித்த சேவல்களின் இறகுகளை

வெந்நீரில் கொய்து

குழம்பு சமைப்பவள்

கிண்ணிக் கோழி முட்டைகளை

அடை வைப்பவள்

தன் மகள் ருதுவான நாட்களில்

கால்களைக்கட்டிக்கொண்டு அழுதவள்

நினைவுகள் எல்லாம்

சரியாக இருக்கும் பட்சத்தில்

எனக்குத் தெரியாததெல்லாம்

மாதா கோயில் மணியோசைக்கு

தனது சமையற்கட்டில் முக்காடிட்டு

ஏன் கண்ணீர் சொரிந்தாள் என்பதும்

ரசத்திற்கரைத்த அம்மியில்

ஏன் அரளி விதைகளைத் தட்டினாள் என்பதும்

எனது சந்தேகமெல்லாம்

கஞ்சியிலிட்ட விறைத்த ஆடைகள்

பொதுவில் அழியவிட்ட மீன்கள்

மற்றும் உடல் முறுக்கி பட்டை கழற்றும்

அந்த யூக்லிப்டஸ் மரங்களின் மீதும்தான்.


நன்றி: செல்மா ப்ரியதர்ஸன்.

_நான் ரசித்த கவிதைகளுடன்.. ப்ரியமுடன்

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More