Blogroll

Saturday, July 23, 2011

டோகா கேப்டன் நவீன கால்பந்தின் 'அவமானச்சின்னம்' -உண்மை சம்பவங்களின் தொகுப்பு


டோகா கால்பந்து அணியின் கேப்டன் ஒரு வேளை உலகின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கராக இருக்கலாம்.ஆனால் பொதுவாக அவரது மனம் பணத்தை தேடிதான் அலைந்து திரிந்தது.நவீன கால்பந்தில்,மோசமான கால்பந்து வீரருக்குரிய அத்தனைஅடையாளங்களும் அவருக்கு இருந்தது.இதற்கு சில சம்பவங்களை உதாரணமாக கூறலாம்.
கடந்த 2006ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முதல் முறையாக டோகா அணி தகுதி பெற்றது.பெரும்பாலான கால்பந்து வீரர்கள் சல்லிக்காசு கூட வாங்காமல் தாய்நாட்டுக்காக உலக கோப்பை போட்டியில் விளையாட தாயராக இருப்பார்கள்.அந்த உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ஒரு வீரருக்கு தலா 1,96,000 யு.எஸ். டாலர்களை சம்பளமாக தர வேண்டும் என்றும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 38 ஆயிரம் யு.எஸ்.டாலர்களும் 'டிரா'வுக்கு 19 ஆயிரம் டாலர்களும் கூடுதலாக தரவேண்டும் என்றும் டோகா கால்பந்து சங்கத்துக்கு கோரிக்கை விடுத்தார் அடபாயர்.இல்லையென்றால் உலக கோப்பை போட்டியில் டோகா களம் இறங்காது என்றும் அவர் மிரட்டினார். பின்னர் 'பிபா' தலையிட்டதால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.ஆனால் அந்த உலக கோப்பையில் டோகா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமலும் 'டிரா' கூட செய்ய முடியாமலும் 3 முதல் சுற்று போட்டியிலும் தோற்று போட்டியை விட்டு வெளியேறியது.
கடந்த 2008ம் ஆண்டு ஆர்சனல் அணிக்காக விளையாடி வந்த இம்மானுவேல் அடபாயர் அந்த அணியின் கேப்டன் தியேரி ஹென்றிக்கு இணையாக 65 ஆயிரம் பவுண்டுகளை வார சம்பளமாக தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார். இவரது சம்பளம் வாரத்திற்கு 61 ஆயிரம் பவுண்டுகள்.இவரை விட அவருக்கு 4 ஆயிரம் பவுண்டுகள் அதிகம். ஆனால் ஆர்சனல் அணிக்காக தியேரி ஹென்றி அடித்த கோல்கள் 226.இவர் அடித்ததோ வெறும் 46 மட்டுமே. அவ்வாறு தரவில்லை என்றால் ஆர்சனலை விட்டு விலகுவேன் என்று கூறிய அவர் அந்த அணியை விட்டு விலகி மான்செஸ்டர் சிட்டியில் இணைந்தார். பெரும்பாலான கால்பந்து வீரர்கள் தங்களது முன்னாள் கிளப்புகளுக்கு எதிராக விளையாடும் போது கோல் அடித்தால் அமைதியாகவே இருப்பார்கள். கோல் அடித்ததை ஆர்ப்பாட்டமாக கொண்டாட மாட்டார்கள். ஆனால் ஆர்சனலுக்கு எதிராக ஒரு முறை கோல் அடித்த அடபாயர் நேரே ஆர்சனல் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று காலரியின் தடுப்பு சுவரில் ஏறி நின்று 'வெற்றி எனக்கே' என்று கொக்கரித்தார். இந்த போட்டி நடந்தது ஆர்சனலுக்கு சொந்தமான எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில்.
இவற்றை எல்லாம் விட மோசமாக 2008ம் ஆண்டு இன்னொரு சம்பவம் நடந்தது. ஜாம்பியாவுக்கு எதிராக ஒரு சர்வதேச ஆட்டத்தில் விளையாட டோகா அணி கிளம்பிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று விமானத்தில் ஏற மறுத்து அடபாயர் அடம் பிடித்தார். காரணம் என்ன தெரியுமா? விமானம் விபத்துக்குள்ளாகி விட்டால் என் உயிருக்கு யார் உத்திரவாதம்? தருவார்கள். இந்த விமானத்தில் டோகா கால்பந்து சங்கத் தலைவரும் வந்தால் மட்டுமே தானும் ஏற முடியும் என்று கூறி அடம் பிடித்தார். அன்றைய தினத்தில் டோகா கால்பந்து சங்கத் தலைவரின் தாய் இறந்து போனார். தாயாரின் இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த போது டோகா கால்பந்து சங்க தலைவருக்கு தகவல் போனது. அங்கிருந்தவாரே அவர் சமாதானம் செய்தாலும் அடபாயர் சமாதானமாகவில்லை.கடைசி வரை அடபாயர் விமானத்தில் ஏற மறுத்து விட்டார். இவரைத் தவிர அனைத்து வீரர்ளும் விமானத்தில் ஏறி பத்திரமாக ஜாம்பியோ போய் சேர்ந்தனர். ஆனாலும் அடபாயர் இல்லாத டோகா அந்த போட்டியில் தோற்றும் போனது.அதே வேளையில் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள அங்கோலாவுக்கு பஸ்சில் சென்ற போதுதான் தீவிரவாதிகள் டோகா வீரர்களை தாக்கினர் என்பதையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று இம்மானுவேல் அடபாயர் நிர்பந்தம் செய்திருக்கலாம். எல்லாம் என் தலைவிதி என்று டோகா கால்பந்து சங்கம் அதனை ஏற்றிருக்கலாம்.
இங்கிலீஸ் பிரீமியர் லீக் நடப்பு சீசனில் ஆர்சனல் மான்செஸ்டர் சிட்டிக்கு சொந்தமான 'ஈஸ்ட்லேன்ட்' ஸ்டேடியத்தில் ஒரு போட்டியில் விளையாடியது.ஒரு கிளப்பை விட்டு விலகிய வீரர்கள் முன்னாள் சக வீரர்களை சந்திக்கும் போது உணர்ச்சிபெருக்கமாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொள்வார்கள். ஆர்சனல் மான்செஸ்டருக்கு வந்த போது,அவர்களிடம் சென்று கைகுலுக்காத அடபாயர் அந்த போட்டியின் போது பழிவாங்கும் நோக்குடன் இருந்தார்.அந்த போட்டியில் தனது முன்னாள் சகாவான ரூபின் வான் பார்சி முகத்தில் முழங்கையால் தாக்க அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் தாரை தாரையாக வழிந்தது. இதனையடுத்து அடபாயருக்கு 4 போட்டிகளில் பங்கேற்க எப்.ஏ தடை விதித்தது. அது போல் ஆர்சனல் கேப்டன் செஸ்க் பெப்ரிகாசையும் இந்த போட்டியின் போது அடபாயர் தாக்கினார்.
இப்படிப்பட்ட அடயபார் உயிருக்கு பயந்து கால்பந்தில் இருந்து விலகி இருப்பது ஒன்றும் ஆச்சரியமாக விஷயம் இல்லை. அவருக்கு தாய்நாட்டுக்கு விளையாடுவதை விட கிளப்புகளுக்காக விளையாடினால் கோடி கோடியாக டாலர்கள் கொட்டுகிறது.இதனால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்க கூடும். 'வானத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு கல் தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு ' என்ற பழமொழியை அடபாயர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More