Blogroll

Monday, September 5, 2011

சென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது!!!


கிபி 2080 - சென்னை. அம்மா, அப்பா மற்றும் ஒரு பையன் உள்ள ஒரு குடும்பம். ஒரு உயர்தர சீன உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.


பையன்: அம்மா, இன்னிக்கும் எனக்கு நூடுல்ஸ் போதும்.

அம்மா: என்னப்பா, அது மட்டும் எப்படி போதும்? வேறே ஏதாவது சாப்பிடு.

பையன்: போம்மா. ஒரே போரடிக்குது.

அம்மா: ஏங்க, இவன் எப்போ பாத்தாலும் இப்பத்தான் போரடிக்குது, போரடிக்குதுன்னு சொல்லிட்டிருக்கான். இந்த வருஷமாவதுஅரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பெங்களூர், மைசூர் போகலாங்க. அப்புறமாவது கொஞ்ச நாளைக்கு சும்மா இருக்கானான்னு பாப்போம்.

அப்பா: சரிம்மா. ஏற்பாடு பண்றேன். நம்ம எல்லாருக்கும் பாஸ்போர்ட் இருக்கு. விசா மட்டும்தான் எடுக்கணும். அதுவும் பிரச்சினையில்லை. ஒரே நாள்லே எடுத்துடலாம்.

மகன்: ஹையா.. ஜாலி.. விசான்னா என்னப்பா?

அப்பா: விசான்றது ஒரு நாட்டுக்குள்ளே போறதுக்கான அனுமதிச்சீட்டு. அது இருந்தாத்தான் அவங்க நாட்டுக்குள்ளேயே போக அனுமதிப்பாங்க.

மகன்: நீங்க விசா எடுத்துண்டு நிறைய் தடவை பெங்களூர் போயிருக்கீங்களாப்பா?

அப்பா: நான் சின்ன வயசா இருந்தப்போல்லாம், பெங்களூரும் சென்னையும் ஒரே நாட்டுலேதான் இருந்துச்சு. கொஞ்ச வருஷம் முன்னாலேதான் இப்படி ஆயிடுச்சு. அன்னிலேர்ந்து, இங்கேயிருந்து யார் அங்கே போனாலும் அல்லது அங்கேயிருந்து யார் இங்கே வந்தாலும், விசா எடுத்துத்தான் ஆகணும்.

மகன்: சரி. அங்கே போய் நாம என்னென்ன பாக்கப்போறோம்பா?

அப்பா: மைசூர் அரண்மனை பாக்கலாம். அப்புறம், நம்ம பாட்டி வீட்டு பின்னாடி ஓடுதில்லையா, காவிரி, அது புறப்பட்டற இடத்தை பாக்கலாம்.

மகன்: சூப்பர்பா. எனக்கு பாட்டி வீட்டுக்கு போகறதுக்கு பிடிக்கறதே அந்த காவிரி ஆறுதான். வருஷத்திலே எப்போ போனாலும், மேல் படிக்கட்டு வரைக்கும் தண்ணி ஓடிண்டேயிருக்கும். நீங்க சின்ன வயசிலே ரொம்ப என்ஜாய் பண்ணியிருப்பீங்க, இல்லையாப்பா?

அப்பா: இல்லைப்பா. அப்போல்லாம் இந்த காலம் மாதிரி இல்லே. கர்நாடகாலேர்ந்து தண்ணி திறந்துவிட்டாத்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணி வரும். அதுக்கு பெரிய பெரிய கலாட்டால்லாம் நடக்கும். நம்ம அரசியல் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் இருப்பாங்க. திரைப்படக் கலைஞர்களெல்லாம் ஊர்வலம் போவாங்க.

மகன்: இப்போல்லாம் அந்த மாதிரி பிரச்சினை இல்லையாப்பா?

அப்பா: இல்லேப்பா. கர்நாடகா வேறே நாடானப்புறம் இந்த தண்ணி பிரச்சினை ஈஸியா தீர்ந்திடுச்சு.

மகன்: இப்போ கர்நாடகா எந்த நாடுப்பா?

அப்பா: China.

பின் - 1: இது சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் போட்டிக்கான எனது இரண்டாவது இடுகையா போடலாமான்னு தெரியல. உங்க பதில்களைப் பார்த்துத்தான் முடிவு பண்ணணும்.

பின் - 2: கடந்த 4 வருடங்களில் 300+ முறையாக எல்லை தாண்டி பிரச்சினை செய்திருக்கும் சீனாவை, சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா, பிற்காலத்திலும் அப்படியே இருந்தால், என்ன ஆகும் என்கிற கற்பனைதான் இந்த பதிவு.

பின் - 3: காவிரி பிரச்சினை இரு நாடுகளுக்கிடையே இருந்திருந்தால், எப்போவோ தீர்ந்திருக்கும் என்று ஞாநி சொல்லியிருந்தார். அதையும் இந்த 'சிறு' கதையில் பொருத்திவிட்டேன்.

சின்னப்பையன் தொகுப்பிலிருந்து உங்களுக்காக... ப்ரியமுடன்

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More