Blogroll

Wednesday, September 21, 2011

தமிழர்களிடமும் ஒரு கேள்வி


கேள்வியை நான் நேரடியாகவே கேட்டுவிடுகிறேன்! வருஷத்தில் 365 நாட்களில், எத்தனை நாட்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?

இதுதான் எனது கேள்வி! இப்படி நான் கேட்டதும், ஏதோ, “ மகிழ்ச்சியாக இருக்க 30 வழிகள்” “ சந்தோசமாக பொழுதைக் கழிப்பது எப்படி?” போன்ற புத்தகங்களில் இருந்து, எதையோ சுட்டுக்கொண்டுவந்து இங்கு ஒப்புவிக்கப் போவதாக நீங்கள் நினைத்தால், அது தவறு!

எனது கருத்து என்னவென்றால், தமிழர்களாகிய நாங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாகும்! இது எப்படி என்று விளக்குகிறேன்! மகிழ்ச்சியாக இருப்பது ஒருவகை குற்றம் என்று எம்மையறியாமலேயே எமக்குள் ஒரு கருத்து விதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணருகிறீர்களா?

நாம் சத்தமிட்டு, வயிறு வலிக்க சிரிக்கும் போது, எமது பெற்றோர்கள் சொல்வார்கள் “ அதிகமாக சிரிக்காதே! பின்னர் அழ நேரிடும்” என்று! இப்படி சிறிய வயதில் சொல்லிச் சொல்லியே, நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது கொஞ்சம் பயமும் வந்துவிடுகிறது!

தமிழனின் மகிழ்ச்சி தொலைந்து போனதுக்கு, தமிழனை ஆழ்பவனும் ஒரு காரணம்! இது பற்றி பின்னர் சொல்கிறேன்! அதுமட்டுமல்ல, தமிழன் ஆயிரத்தி எட்டு பிரச்சனைகளை வலிந்து, அழைத்து தனது தலையில் தூக்கிப் போடுவதால்தான் அவனது மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது!


வெள்ளைக்காரனைப் பாருங்கள்! வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்துவிடும் அவனது சொர்க்கலோக வாழ்க்கை ஞாயிறு முன்னிரவு வரை தொடரும்! பின்னர் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை கடும் உழைப்பு! மறுபடியும் வெள்ளிமாலை கூத்து, கும்மாளம், ஜாலி, என்ஜாய்..... அனைத்துமே!

இப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க தமிழனுக்கு உரிமை இல்லையா? அல்லது அப்படி மகிழ்ச்சியாக இருப்பது குற்றமா? வெள்ளைக்காரன் தன்னைச் சுற்றி எந்தவிதமான வட்டங்களும் போடுவதில்லை! ஆனால் ஒவ்வொரு தமிழனையும் சுற்றி எத்தனை வட்டங்கள்!

இப்படியெல்லாம் வட்டங்கள் போட்டு, கட்டுப்பாட்டோடு வாழ்ந்து நாம் என்ன சாதித்து வைத்திருக்கிறோம்? டெலிஃபோனைக் கண்டுபிடித்தோமா? அணுகுண்டைக் கண்டுபிடித்தோமா? எமக்கான சுய கண்டுபிடிப்பு என்ன? இந்த உலகிற்கு நாம், கண்டறிந்து வழங்கியிருப்பது என்ன?

சரி, உலகிற்கு எதனையும் நாம் வழங்க வேண்டாம்! நாமாவது நமது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் இல்லையா? ஒவ்வொரு தமிழனும், தனக்குத் தனக்கென்று வாழாமல், எப்பவுமே அடுத்தவர்களுக்கும் சேர்த்து வாழ்வதால், அடுத்தவர்களுக்கும் சேர்த்து பாரம் சுமப்பதால்தான், யாருமே நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்!

இதற்கு, எமது குழந்தை வளர்ப்பு முறையில் இருந்து கோளாறு தொடங்கிவிடுவதாக, நான் நினைக்கிறேன்! குழந்தைகள் சொந்தக் காலில் நிற்கும்படியாக, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உழைப்பின் அவசியத்தையும் ஊட்டி வளர்க்கிறோமா? இல்லையே!

பாசம் என்ற பேரில் நாம் குழந்தைகளுக்குப் போடும் கட்டுப்பாடுகள்தான் எத்தனை? நான் பலரைப் பார்த்திருக்கிறேன்! அவர்கள் வாழ்வதே இல்லை! கேட்டால் தியாகி மாதிரி கதைப்பர்கள்!

எனது நண்பன் ஒருவனுக்கு 28 வயது! கல்யாணமாகி 3 குழந்தைகள்! அவனது உழைப்பெல்லாம் அவனது குழந்தைகளுக்கே போய்விடுகிறது! வாழ்க்கையில் ஒருநாள் கூட, விமானத்தில் ஏறியதில்லையாம்!, டிஸ்கோ, கிளப்புகளுக்குப் போனதில்லையாம், வெளிநாடுகள் சுற்றிப் பார்த்ததில்லையாம்! தனது மனைவியுடன் வெறும் 2 முறை மட்டுமே, பீச்சுக்குப் போனானம்! சினிமாவுக்கு அதுவும் வெறும் 9 முறை மட்டும் தானாம்!

கல்யாணமாகி எண்ணி சரியாக 10 ம் மாதம் குழந்தை பெறும், மடமையை தமிழன் ஒழிக்க வேண்டும்! ஒரு 5 வருஷம் தள்ளி குழந்தை பெத்தால் என்ன குடியா முழுகிவிடும்? இங்குதான், தமிழனுக்குப் பிரச்சனையே! கல்யாணமாகி 5 வருஷங்கள் குழந்தை பெறாவிட்டால், ஏனைய தமிழனுக்குப் பொறுக்காது! அந்தப் பெண்ணை மலடி என்று திட்டுவார்கள்!

இந்தக் கொடுமை தாங்காமல்தான் பலபேர் பிள்ளை பெத்து தங்களை நிரூபிக்கிறார்கள்! முதலில் இந்தக் கன்றாவியான சமூகத்துக்குப் பயப்படுவதை தமிழன் நிறுத்த வேண்டும்! கல்யாணமாகி ஒரு 5 வருஷம், எல்ல இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து, ஆசைதீர மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அதன் பின்னர் குழந்தை பெறலாம்! தமிழன் துணிய வேண்டும்!

நான் முன்னர் சொன்ன, நண்பன் தோற்றத்தில் 35 வயதுக்காரன் போல இருக்கிறான்! பேச்சில் தன்னம்பிக்கையோ, இளமையோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! இப்படியெல்லாம் வாழ்வைத் தொலைக்கச்சொல்லி அவனுக்கு யார் சொல்லிக்கொடுத்தது?

மனித வாழ்க்கை ஒருமுறைதான்! இம்மை, மறுமை, மேலோகம், கீழோகம், சொர்க்கம் , நரகம் இதெல்லாம் சுத்த பித்தலாட்டம்! முக்கியமாக சொர்க்கம் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்!

நாம் செத்ததுக்குப் பின்னாடி, சொர்க்கத்துக்குப் போகலாம்! அங்கு மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் உள்ளன என்று தமிழனுக்கு மிகவும் மோசமான நஞ்சு குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படுகிறது!

சொர்க்கமாவது, மண்ணாவது! நாம் வாழும் இந்த பூமிதான் சொர்க்கம்! அதில் இப்போது நாம் வாழும் வாழ்க்கைதான் நிஜமானது! செத்த பின்னாடி, எமது உடலை புழுக்கள்தான் தின்னும்! - இந்த உண்மையை தமிழன் நெஞ்சில் பதிக்க வேண்டும்!

நாம் வாழும் ஊரை, நகரத்தை, வீட்டை சொர்க்கமாக வைத்திருந்தாலே போதும்! வாழ்வே சொர்க்கமாகிவிடும்! ஒவ்வொரு தமிழனும், இந்த சொந்தம் பந்தம், பாசம், நேசம், செண்டிமெண்ட் எல்லாத்தையும் தூக்கி வீசிவிட்டு, தனித்தனியாக வாழ பழக வேண்டும்! அப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்!




0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More