Blogroll

Sunday, September 11, 2011

காதலிச்சே சாவுங்கடா....


கிளாஸ் முடிஞ்சு வெளிய வர்றப்போ...சில்லுனு குளிர்ந்த காற்று முகத்தில்


அடித்தது. ஹ்ம்ம் மழை வரும் போல இருக்கு. நினைத்து போல ஒரு துளி

கன்னத்தில் விழுந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா மழை எப்போதுமே அழகுதான்.

பிறக்கும் போதும் இறக்கும் போதும் அழகா இருக்கும் மழை எப்போதுமே எனக்கு

புடிக்கும்.



ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்ட் வந்தேன். கண்களை அலைய விட்டேன்.

எல்லாரும் மழைக்கு பயந்து அவசரம் அவசரமாக ஓடி ஒளிந்துகொண்டு

இருந்தார்கள். எனக்கும் கையிலிருக்கும் புக்ஸ் எல்லாம் நனைந்துவிடுமோ னு

கொஞ்சம் கவலையா தான் இருந்தது. ஆனாலும் மழையை சபிக்க நான்

தயாரில்லை. தூரத்தில் நான் போக வேண்டிய பஸ் வரமாதிரி தெரிந்தது. பஸ்

ஸ்டாண்ட்-இல் பஸ் நின்றதும் ஹோ என்ற ஆர்ப்பரிப்புடன் பரபரப்பாக பஸ்-இல்

ஏற தொடங்கினார்கள். எனக்கு எப்போதுமே பஸ்ல படிகட்டில தொங்கிட்டு

போறது புடிக்கும். உள்ள பொய் நெரிசலில் சிக்க வேண்டாம் என்கிற ஒரு

சுதாரிப்பும் கூட. சிலநேரம் தவிர்க்க முடியாமல் உள்ளே போக நேரிடும்.

அன்னைக்கும் அப்பிடி தான். படிக்கட்டை தாண்டி உள்ளே போகவேண்டிய ஒரு

சூழ்நிலை. ஆனாலும் நான் நிற்கிற இடத்திலிருந்து பஸ் உள்ளால முழுவதும்

பார்க்க முடிந்தது.


திடீர் என்று ஒரு மின்னல் கீற்று என்னை கடந்து சென்றது போல ஒரு உணர்வு.


நிஜமா மின்னல் தானா இல்லை எதாச்சும் பிரம்மையா ஒரு கணம் யோசித்து

கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் அதே மின்னல். நான் நிற்ப்பது பஸ்-ன்

பின்னால் உள்ள படிக்கட்டு பக்கத்தில். மின்னல் வந்தது பஸ்-ன் முன்னால் உள்ள

படிக்கட்டு பக்கத்தில் இருந்து. அவள் பேரழகி ஒன்றும் இல்லை. எதோ

பார்கிறதுக்கு சுமாரா இருந்தாள். ஆனாலும் என்னவோ அவள் வீசிவிட்ட அந்த

பார்வையில் எதோ இருந்தது. தலையில் வைத்திருந்த மல்லிகை பூ

வாடியிருந்தது. அது கூட சில நேரம் பெண்களுக்கு கூடுதல் மாலை நேர அழகு

கூட்டுகிறது. புக்ஸ் எல்லாம் மார்புடன் சேர்த்து அனைத்து பிடித்திருந்தாள்.

ஹ்ம்ம் ...குடுத்து வைத்த புக்ஸ். அடிக்கடி அவள் பார்வை என் பக்கம் படுவதை

என்னால் தவிர்க்க முடியவில்லை. சரி என்னதான் நடக்கிறது என்று

பார்க்கலாமே என்று நானும் அவளை கவனிக்க தொடங்கினேன்...சைட் அடிக்க

ஆரம்பித்தேன்.

அடுத்த நாள் முதல் அவளின் வருகைக்கு காத்திருக்க தொடங்கினேன். அவள்

போகும் பஸ்-இல் தான் போகணும் என்று எனக்குள்ளே டைம் டேபிள் போட்டு

வைத்துக்கொண்டேன். நான் இறங்கும் ஸ்டாப்பிற்கு ஒரு ஸ்டாப் முன்னால அவ

எறங்கி போகிறதை டெய்லி புன்னகையுடன் பார்த்து மனதுக்குள் பை பை

சொல்லிகொண்டிருந்தேன். ஹ்ம்ம் கல்நெஞ்சகாரி பஸ்-இல் இருக்கும்போது

அடிக்கடி பார்க்கிறாள், பஸ் விட்டு இறங்கி போகும்போது ஒரு புன்னகை கூட

செய்யாமல் திரும்பி பார்க்காமல் போய் விடுவாள்.

இதுக்குமேல நம்மால் தாங்க முடியாது. எப்படியாவது அவளை சந்தித்து இரண்டு

வார்த்தை பேசி காதலை வளர்த்துக்க வேண்டியது தான். ஆனால் உள்ளுக்குள்

ஒரு பயம். ஏதாவது பிரச்சினை ஆகிவிட்டால். அதுவும் முதல் காதல். அதுவே

நமக்கு முடிவுரை ஆகி விட கூடாது. ஹ்ம்ம் என்ன செய்யலாம் என்று

யோசிக்கும்போது..மனதுக்கும் வந்தான் மீனவ நண்பன் மரிய சூசை.


மரிய சூசை வாரம் முழுவதும் கடலில் தொழிலுக்கு போவான். வார கடைசியில்

சம்பாதிச்ச மொத்தமும் செலவு பண்ணுவான். ஆள் பார்க்கிறதுக்கு கொஞ்சம்

கரடு மொரடா இருப்பான். அவன் தொழில் அப்படி. கடலில் மீன் பிடிக்க போய்

போய் ஆள் கொஞ்சம் கருப்பா ஒரு மார்க்கமா இருப்பான். ஊர்ல மாரியாத்தா

கோயில் விசேஷம், சூசையப்பர் கோயில் விசேஷம் எதுவானாலும் அதுல

இவனோட ஒரு சண்டை காட்சி கண்டிப்பா ப்ரீ. எதாவது ஒரு காரணத்துக்கு ஒரு

சண்டை இழுத்துகிட்டு வந்துடுவான். ஆனாலும் நண்பர்கள் என்று

வந்துவிட்டால் உயிரையும் குடுப்பான். கணக்கு பார்க்கம செலவும் பண்ணுவான்.

அதனால இவங்க எங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் புடிக்கும். எங்கியாச்சும் வீண்

சண்டைக்கு போறதா இருந்தாலும் இவன் துணையோட தான் போவோம். மரிய

சூசைக்கு புடிக்காத ஒன்னு காதல். ஒரேடியா புடிக்காதுன்னு சொல்ல முடியாது.

ஆனாலும் அவ்வளவா நம்பிக்கை இல்லாதவன். இருந்தாலும் ரொம்ப கெஞ்சி

கூத்தாடி கேட்டுகிட்டா காதல் சம்பந்தமான பிரச்சினைக்கு கூட வருவான்.

அதனால தான் இவனை துணைக்கு கூப்பிட்டு போய் நம்ம ஆளு (இதுவரைக்கும்

அவ பெயர் கூட தெரியாது) கிட்ட காதலை சொல்லிடலாம் னு ஐடியா பண்ணேன்.


சூசை கிட்ட சொன்னதும் மொதல்ல ...ங்கோத்தா ...அப்படி இப்படின்னு

ஆரம்பிச்சான். உனக்கெல்லாம் புத்தியே இல்லையாடா னு அட்வைஸ் எல்லாம்

சொன்னான். கூடவே காது கூசும் அளவுக்கு கெட்டவார்த்தை எல்லாம்

சொன்னான். இருந்தாலும் கெஞ்சி கூத்தாடி அவனை சம்மதிக்க வச்சேன். ஜஸ்ட்

கூட வந்தா போதும். நான் லவ் சொல்லிருவேன் னு சொல்லி அவனை சம்மதிக்க

வச்சேன். அதாவது எங்க ப்ளான் எப்படின்னா....அவ இறங்குற பஸ் ஸ்டாப் - ல

இருந்து அவ வீட்டுக்கு ஒரு அரை கிலோமீட்டர் நடக்கணும். அங்க தான்

நெசவாளர் காலனி இருக்கு. அதுவரைக்கும் எந்த வீடும் கிடையாது. நான் அடுத்த

ஸ்டாப்- ல இறங்கி சூசைய கூப்பிட்டுகிட்டு சைக்கிள் எடுத்துகிட்டு இவளை ஆள்

இல்லாத இடத்துல வச்சு மடக்கனும் (அவ இறங்குற ஸ்டாப்-க்கும் நான்

எறங்குற ஸ்டாப்-க்கும் ஐந்து நிமிஷம் தான் இடைவெளி) எப்படி பார்த்தாலும்

அவ அரை கிலோமீட்டர் நடந்து போறதுகுள்ளே அவளை புடிச்சிடலாம்.


இரவெல்லாம் கனவுகளுடன் காதலாகி போனேன். அவளுடன் இனிவரும்

நாட்கள் எப்படி காதலுடன் கழிக்க போகிறேன் என்று பிளான் பண்ணி பண்ணி

தூங்கிபோனேன். மனசுக்குள்ளே ஒருமாதிரி ஒரு பயம்கலந்த சந்தோசம். எல்லா

நாள் போலவே அந்த நாளும் சென்றது. வழக்கம் போலவே பஸ்-இல் பல

பார்வை மின்னல்களை அவ வீசினாள். பதிவு போலவே எல்லாதுக்கும் நானும்

புன்னகை பூத்தேன். இதோ என் தேவதை பஸ் விட்டு இறங்கி போகிறாள். என்

இதய துடிப்பு நிமிடத்துக்கு நிமிடம் ஏறிக்கொண்டே போகிறது. அடுத்த ஸ்டாப்-

இல் பரபரப்பா இறங்கினேன். சூசை சைக்கிளுடன் நின்றிருந்தான். வாடா மச்சி.

அவ இப்ப தான் இறங்கி போகிறாள். சீக்கிரம் போனா புடிச்சிடலாம் னு அவனை

அவசர படுத்தினேன். என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்தான். சூசை என்னை பின்னால வைத்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

அதோ மச்சி ...அந்த பொண்ணு தாண்டா...நீ பக்கதுல போய் சைக்கிள் நிப்பாட்டு.
]
நான் அவ கூட பேசுறேன்..



சூசை நான் சொன்னது போல் அவ பக்கத்தில போய் சடன் பிரேக் போட்டு

சைக்கிள் நிப்பாட்டுனான்.. நான் சைக்கிள் விட்டு இறங்கி அவளிடம் பேச

முற்படுகையில்...அவன் கண்டும் காணாதது போல் போய்கொண்டே இருந்தாள்.

சூசை என்னை பார்க்க ஆரம்பித்தான்..எனக்கோ அவளிடம் பேச தைரியம்

வரவில்லை...அனால் பேசியே ஆகணும் இன்னைக்கு...தவித்தேன்..ஒன்னும்

புரியாம மக்கு மாதிரி நின்னேன.

ஹலோ மேடம்......சூசை அவளை கூப்பிட்டான்.

எஸ்...என்று அவள் திரும்பி பார்த்து நின்றாள்

என் பிரெண்டு உன்கூட எதோ பேசனுமாம்...என்று சூசை சொல்லும்போதே நான்

அவள் பக்கத்தில் சென்றேன்.


எஸ்...நீங்க யாரு? என்ன பேசணும்...

நானா...நான்...நான்...(அயோ வார்த்தை வர மாடேங்குதே)...இவளோ நாளும் பஸ்

ல பார்த்துட்டு இப்போ நீங்க யாருன்னு கேட்கிறாளே..

எனக்கு போகணும்...ப்ளீஸ் சொல்லுங்க என்ன பேசணும்..

நான்...பஸ்-ல....டெய்லி....பார்த்து...(சூசை என்னை மொறைக்க ஆரம்பிச்சான்,

எனக்கு மணிரத்னம் பட டயலாக் மாதிரி பாதி பாதி தான் பேச்சு வருது)


ஓ...இப்போ எனக்கு ஞாபகம் வருது...

ஸ்ஸ்ஸ் அப்படா இப்பவாச்சும் ஞாபகம் வந்துசே...னு மனசுக்குள்ளே சந்தோஷ

பட ஆரம்பித்தேன்...



ஹேய்...மிஸ்டர் உங்க கிட்ட கேட்கணும் னு நினைச்சேன்...பஸ்-ல என்னை

அடிக்கடி பார்த்து ஏன் சிரிகிறீங்க. ..ஒரு நாள் சிரிச்சப்போ நான் சீரியஸா

எடுத்துக்கல....இப்படி அடிக்கடி பார்த்து லூசு மாதிரி சிரிச்சா என்ன அர்த்தம்...


என்னது லூசா....(எனக்கு கை எல்லாம் வியர்க்க ஆரம்பிச்சுது...மயக்கம் வர

மாதிரி)....ஹேய் நீ தானே பஸ்-ல டெய்லி என்னை அடிக்கடி பார்க்கிறே...அது

தான் நானும் உன்னை பார்த்து சிரிச்சேன்..


நிஜமா..நீ லூசு தான்...நான் பின்னால நிக்கிற கண்டக்டர் எப்போ டிக்கெட் கேட்டு

முன்னால வருவாரு-னு அடிக்கடி பார்ப்பேன். இறங்குற இடம் வரதுக்குள்ளே

கண்டக்டர் வருவாரா மாட்டாரான்னு நான் அவரை அடிக்கடி பார்ப்பேன். அந்த

டைம் ல நீ அங்க நின்னு சிரிக்கிறே. இது உனக்கே கேவலமா இல்ல. இதை

கேட்கிறதுக்கா கூட துணைக்கு ஒரு ஆளையும் கூட்டிகிட்டு வந்தே,.


அவள் சொல்ல சொல்ல ....அவள் கழுத்தில் கிடந்த சிலுவையில் என் காதல்

அறையபடுவது போல தோணியது..


இதை சொல்லிவிட்டு திரும்பி கூட பார்க்காமல்.....அவள் நடக்க ஆரம்பித்தாள்.

நான் திரும்பி சூசையை பார்தேன்....அவன் கண்களில் தெரிந்த

கோபத்தில்.....அவன் மனதில் ஓடிய வார்த்தைகளை என்னால் படிக்க முடிந்தது...


ங்கோத்தா....காதலிச்சே சாவுங்கடா...

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More