Blogroll

Wednesday, August 10, 2011

விசாரணைக்கு வா!


இந்தக் கதையைக் கேளுங்கள். இது ஒரு சோகக்கதை. நிச்சயமாகத் தொண்ணூறு மில்லி கண்ணீர் உத்தரவாதம். உங்களுக்கா எனக்கா என்பதுதான் பிரச்னை.

இந்தக் கதையின் நாயகன் பெயர் பாராகவன். அட, என்னுடைய பெயர் போலவே இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகப் பெயரை மாற்றலாமா என்று முதலில் யோசித்தேன். அது தருமமாகாது என்கிறபடியால் இடையில் இருந்த ஒரு புள்ளியை மட்டும் எடுத்துவிட்டு அதே பெயரையே வைத்துவிட்டேன். பாராகவன் என்கிற இந்தக் கதையின் நாயகன் என்னைப் போலவே ஒரு தமிழ் எழுத்தாளன். என்னைப் போலவே, எழுதுவது தவிர மிச்சமுள்ள ஆய கலைகள் எதிலும் அத்தனை சாமர்த்தியம் போதாத ஒரு சராசரி. அவனுக்கு ஒரு சிக்கல் வந்தது. ஆகவே, அந்தப் புள்ளியிலிருந்து இந்தக் கதை தொடங்குகிறது.

பாராகவன், வருமானம் என்ற ஒன்றை ஒரு குத்துமதிப்பாகவேனும் பார்க்கத் தொடங்குவதற்கு முன்னமேயே, முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிய அவனது தந்தையார் அவனுக்கு வருமானவரி நிரந்தரக் கணக்கு எண்ணுக்கு விண்ணப்பம் செய்துவிட்டிருந்தார். எதிர்காலத்தில் பையன் கோடி கோடியாகச் சம்பாதிக்கப் போகிறான் என்று சரியாகத் தப்புக்கணக்குப் போட்டு இந்தச் செயலை அவர் செய்தார். இந்த வகையில், இக்கதையின் மிக முக்கியமான திருப்புமுனைக்கு அவரே காரணமாகிறார். தனது இந்தச் செயல் சரித்திரத்தில் இடம்பெறப் போகிறது என்பதோ, ஒரு துயர சரித்திரத்தின் அடிக்கல்லாகத் தனது செயல்பாடு அமையப்போகிறது என்பதோ அந்த உத்தமோத்தமருக்கு லவலேசமும் தெரியாது. ஒரு வெள்ளைக் கடுதாசி. டியர் சார் என்று ஆரம்பம். பெயர். தந்தை பெயர். தாத்தா பெயர். பிறந்த தேதி, மாதம், வருடம். முகவரி. தீர்ந்தது விஷயம்.

PAN என்றொரு சங்கதியும் அதன் ஸ்தூல ரூபமான சதுர அட்டையும் தமிழ்கூறும் நல்லுலகில் அறிமுகமாகிக்கொண்டிருந்த கிபி இருபதாம் நூற்றாண்டின் தொண்ணூறாவது வருடங்களின் மத்தியில் இச்சம்பவம் நடைபெற்றது. எனவே, வருமான வரித் துறையினருக்கே ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்திருக்கும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குழப்பங்களின் குற்றியலுகரமாகப் பல பேரின் நிரந்தரக் கணக்கு அட்டையில் புகைப்படங்கள் மாறியிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. குப்புசாமிகளின் அட்டைகளில் கோவிந்தசாமிகளின் புகைப்படங்கள். குமாரசாமிகளின் அட்டைகளில் குழந்தைசாமிகளின் பெயர்கள்.

இதெல்லாம் எம்பெருமானின் அலகிலா விளையாட்டுகளின் ஒரு பகுதி என்று எடுத்துக்கொண்டு தன் கடன் பணி தேடிக் கிடந்த பாராகவனுக்கும் நிரந்தரக் கணக்கு அட்டை ஒரு நன்னாளில் வந்து சேர்ந்தது. அவனது தகப்பனாருக்குப் பரம திருப்தி. வருமான வரிக் கணக்கு அட்டை வந்துவிட்டது. இனி வருமானம் வரவேண்டியதுதான் பாக்கி. அது தன் வேலையல்ல என்று வந்த அட்டையை எடுத்து உள்ளே பத்திரப்படுத்திவிட்டுப் போய்விட்டார்.

சம்பவம் நடந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் பாராகவனாகப்பட்டவன் அந்த அட்டையை எடுத்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுங்கூட வரி கட்டுமளவுக்கு அவன் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கவில்லை என்றாலும், நான் வரி கட்டுமளவு சம்பாதிக்கவில்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சுய தீர்ப்பு வழங்கவேண்டிய புதிய சட்டம் அப்போது அமலுக்கு வந்திருந்தது.

எடுத்துப் பார்த்த பாராகவனுக்கு திடுக்கிட்டது நெஞ்சம். அடக்கடவுளே, இதென்ன என் அப்பா பெயரை என் பெயராகவும், தாத்தா பெயரை என் அப்பா பெயராகவும் மாற்றி அச்சிட்டிருக்கிறார்களே. எல்லாம் இந்த எழவெடுத்த ஆங்கிலேய கிவன் நேம், சர் நேம், லாஸ்ட் நேம் சம்பிரதாயங்களால் வந்த வினை.

என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அப்பாவாகப்பட்டவர் அப்போது பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டபடியால், அவரை மேற்கொண்டு இம்சிக்க விரும்பாமல் பேசாதிருந்துவிட்டான். பெயரில் என்ன இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். முன்பே சொன்னபடி அவனது ஆய கலைகள் 63ன் குறைபாடும் இவ்விடத்தில் செயல்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பெரிய பிரச்னை ஏதும் அப்போது இல்லாதபடியால் அந்தப் பெயர் மாற்றக் குழப்படியை அவன் சுத்தமாக மறந்தே போனான்.

பிறகு சில வருடங்கள் கழித்து, வருமான வரித்துறையினரிடமிருந்து அவனுக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. திரு. பாராகவன்! நீங்கள் திருவனந்தபுரம் அனந்தபத்மனாபன் அளவுக்கு சம்பாதித்துக் குவித்திருக்கிறீர்கள். ஆனால் வருமான வரித்துறைக்குச் சரியாகக் கணக்குகளைச் சமர்ப்பிக்காமல் ஏமாற்றியிருக்கிறீர்கள். உங்களைக் கூண்டிலேற்றி விசாரிக்க அன்புடன் அழைக்கிறோம். நாளது சித்ரபானு வருஷம் ஆனி மாதம் சுக்ல பட்சம் குருவாரம் உதயாதி நாழிகை பத்தே முக்கால் மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்குள் (பூரண ராகுகாலம்) எங்கள் அலுவலகத்தில் இன்ன ஆபீசர் முன் ஆஜராகக் கடவீர்.

ஓர் எழுத்தாளனுக்கே உரிய குலைநடுக்கங்களுடன் பாராகவன் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அதிகாரி முன்னால் போய் நின்றான்.

ஐயா நான் ஒரு தமிழ் எழுத்தாளன். இந்த வகையினைச் சேர்ந்தவர்கள் அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயிலின் வாயில் காப்போன் அளவுக்குக் கூட சம்பாதிக்க திராணியற்றவர்கள். கோடிக்கணக்கில் கருப்புப் பணம் சேர்த்து கல்லா கட்டும் கலையறியாக் கபோதிகள். ஏதோ பெரிய சரித்திரப் பிழை நேர்ந்திருக்கிறது. கொஞ்சம் கருணை கூர்ந்து கணக்கு வழக்குகளைச் சரியாகப் பார்க்க வேணும்.

அதிகாரி அவனை ஏற இறங்கப் பார்த்தார். சரி போ. மூன்று மாதம் கழித்து திரும்ப விசாரணைக்கு வா என்று வாய்தாக் கடுதாசி போட்டு அனுப்பிவிட்டார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகாரி அழைப்பதும் அவன் போய் அதே பாட்டை வேறு வேறு மேளகர்த்தா ராகங்களில் பாடுவதுமாக இந்தக் கச்சேரி சுமார் ஓராண்டு காலம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இடைப்பட்ட காலங்களில் அந்த உத்தம அதிகாரி அவனுக்கு நெருங்கிய சிநேகிதராகிவிட்டார்.

‘இதெல்லாம் கம்ப்யூட்டர் பண்றது சார். ரேண்டமா சிலபேரை சிஸ்டம் செலக்ட் பண்ணிக் குடுக்கும். அவங்களைத் துருவிப் பாக்கறது வழக்கம். ஸ்க்ரூட்டினின்னு சொல்லுவோம். சமயத்துல சில நிஜமான ஃப்ராட் கேசுகள் மாட்டும்’ என்று சாதாரணமாகச் சொன்னார்.

அடக்கஷ்டமே. கடவுள்தான் விதியை எழுதுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த பாராகவனுக்கு அன்றுதான் கம்ப்யூட்டர் அதை எழுதுவது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் மற்றதுக்கும் நஷ்ட ஈடெல்லாம் கேட்கப்படாது. ஒழுங்காக வீடு போய்ச்சேர். மேற்கொண்டு ஸ்க்ரூட்டினியில் சிக்காதிருக்க எல்லாம் வல்ல எம்பெருமான் உன்னோடு இருப்பான் என்று சொல்லி அனுப்பினார் நல்ல அதிகாரி.

விட்டதா சனி?

ம்ஹும். அந்த ஓராண்டுக் காலத்தில் பாராகவன் தினசரி தனது வருமான வரி நிரந்தரக் கனக்கு அட்டையை எடுத்து எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்ததில், அந்த முதல் சரித்திரப் பிழை பூதாகாரமாகத் தெரிந்தது. அவன் பெயரிடத்தில் அப்பா பெயர். அப்பா பெயரிடத்தில் தாத்தா பெயர். தவிரவும் அது திரேதா யுகத்தில் அச்சிடப்பட்ட பழுப்புத் தாள். நவீன வரியாளர்கள் எல்லோரும் வழுவழுவென்று பிளாஸ்டிக் அட்டைகள் வைத்திருக்கிறார்கள். மாறும் புகைப்படங்களில்கூட மனம் கவரும் வகையில் தமன்னா, ஸ்ரேயாக்களின் படங்கள்தான் வருகின்றனவாம்.

பிழையைச் சரிசெய்து தானும் ஏன் ஒரு நல்ல பளபளப்பான பிளாஸ்டிக் அட்டையாக வாங்கிக்கொள்ளக்கூடாது என்று பாராகவனுக்குத் தோன்றியது. பழைய பிரச்னையோடு பழைய அட்டையையும் ஒழித்துக் கட்டி, புதியன புகுவது நல்லதே அல்லவா?

ஆகவே இம்முறை அவனது அப்பாவுக்கு பதிலாக அவனே விண்ணப்பம் எழுதினான். தன் பெயர். தன் தந்தையின் பெயர். தாத்தாவின் பெயர். பிறந்த தேதி, மாதம், வருடம். முந்தைய நிரந்தரக் கணக்கு அட்டையில் இடம் பெற்றிருந்த பிழைகளின் விவரம். சரியான விவரங்களுக்கான சரியான ஆதாரங்களை உடன் இணைத்திருக்கிறேன். கருணை கூர்ந்து பளபளப்பான புதிய பிளாஸ்டிக் அட்டையைக் காலக்கிரமத்தில் அனுப்பிவைக்கக் கோரும் தங்கள் உண்மையுள்ள பாராகவன்.

ஒரு மாதம் கழித்து வருமான வரித்துறையினரிடமிருந்து அவனுக்கு ஒரு பதில் வந்தது.

திரு. பாராகவன்! நீங்கள் அனுப்பிய விவரங்களைக் கண்டோம். எங்கள் டேட்டா பேஸில் உள்ள விவரங்களும் நீங்கள் அனுப்பிய விவரங்களும் சற்றும் பொருந்தவில்லை. நீங்கள் உங்கள் அப்பா என்று குறிப்பிட்டிருப்பவர், எங்கள் விவரப்படி உங்கள் அப்பா இல்லை. அது எப்படி அவ்வாறு இருக்கலாம்? உங்கள் அப்பாவுக்கு நீங்கள் தவறாகப் பெயரிட்டிருப்பது மாபெரும் தவறு. இக்கடிதம் கண்ட பதினைந்து நாள்களுக்குள் நீங்களும் உங்கள் நிஜமான அப்பாவும் எங்கள் அதிகாரி முன்னிலையில் ஆஜராகக் கடவீர். அவர்தான் உங்கள் அப்பா என்பதற்குத் தக்க ஆதாரங்களைக் கொண்டுவருவது அவசியம். அவரது அப்பா இன்னார் என்பதற்கான ஆதாரங்களும் பரம அவசியம்.

ஆடிபோனான் பாராகவன். விதி திரும்பவும் ஒரு பிளாஸ்டிக் கார்ட் ரூபத்தில் விளையாடத் தொடங்கிவிட்டதா? பிரதி வெள்ளிக்கிழமை லீவு போட்டுவிட்டு அப்பாவை அழைத்துக்கொண்டு வருமான வரி அலுவலகத்துக்குத் தீர்த்த யாத்திரை போகவேண்டியதுதானா? தள்ளாத வயதில் பொல்லாத விதிக்கு அவரும் இரையாகவேண்டியதுதானா? அவர்தான் தனது தந்தை என்று பாராகவனால் நிரூபித்துவிட முடியும். ஆனால் முதல் உலகப்போருக்கு முன்னால் செத்துப்போன அவரது தந்தையார் இன்னார்தான் என்று என்ன ஆதாரங்களை வைத்து நிரூபிப்பது? ரேஷன் கார்டு, டிசி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட்… ம்ஹும். அந்தப் புண்ணியாத்மா உயிர் வாழ்ந்த காலத்திலேயே இதெல்லாம் இருந்திருக்குமா என்பது சந்தேகம்.

எனக்கு ப்ளாஸ்டிக் அட்டையே வேண்டாம், உங்கள் டேட்டா பேஸே என் தெய்வம், என் தாத்தா பெயரே அப்பாவின் பெயராக இருந்துவிட்டுப் போகட்டும், ஆளை விடுங்கள் என்று கதறிக் கண்ணீர் மல்க ஒரு கடுதாசி போட்டுவிட்டு அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டான் பாராகவன்.

அதோடு முடிந்தது என்றுதான் அவன் நினைத்தான். சரியாக ஒரு வருடம். ஆட்சி மாற்றம் நடைபெற்ற சூட்டில் அனைத்துத் துறைகளும் சுறுசுறுப்பாக வேலை பார்க்கத் தொடங்கியிருக்கின்றன அல்லவா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மாநிலத்தில் குப்பை கொட்டும் வருமான வரித்துறையின் டேட்டா பேஸும் விழித்துக்கொண்டு விட்டது.

நேற்றைக்குப் பாராகவனுக்குத் திரும்பவும் ஒரு கடுதாசி வந்திருக்கிறது. திரு. பாராகவன்! நீங்கள் எக்கச்சக்கமாக சம்பாதித்துவிட்டீர்கள். ஏ.ஐ.ஆர். அப்படித்தான் சொல்கிறது. ஆனால் உங்கள் PAN எண்ணைக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறீர்கள். இது சம்பந்தமாக உங்களை விசாரிக்க வேண்டியிருக்கிறது. இக்கடிதம் கண்ட பதினைந்து நாள்களுக்குள் எங்கள் அதிகாரி இன்னாரை நேரில் வந்து சந்திக்காவிட்டால்….

ஊர் மெச்சும் பிரபல எழுத்தாளனாக இருந்து என்ன புண்ணியம்? ஏ.ஐ.ஆர். என்றால் ஆனுவல் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்டா? ஆல் இந்தியா ரேடியோவா? முன்னது என்றால், பாராகவன் வருடம் தவறாமல் வரி கட்டியதற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. பின்னது என்றால் அந்தத் தலத்தின் வாசல் படியைக் கூட வாழ்நாளில் ஒருமுறையும் அவன் மிதித்ததில்லை. இதை அந்த அதிகாரிக்குப் புரியவைக்கச் சரியான சொற்கள் கிடைக்காமல் தவித்துத் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறான் பாராகவன். ஒன்றும் பெரிய விஷயமில்லை. நேரில் ஆஜராகி விளக்கம் தரலாம். அவர் ஏற இறங்கப் பார்த்துவிட்டு இரண்டு மாதம் கழித்து வரச் சொல்லி வாய்தா கொடுப்பார். திரும்பப் போனால் திரும்ப இரண்டு மாதம். இப்படி ஒரு வருடம் கழித்து ஒரு குத்துமதிப்பான பெனால்டி. எதற்குப் பெனால்டி? அதெல்லாம் கேட்கப்படாது. அப்படித்தான்.

அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டுமென்று எந்த நல்ல குடிமகனும் நிச்சயமாக நினைக்கமாட்டான். ஆனால் அரசாங்கம் என்பது இந்த மொக்கை அதிகாரிகளும், சார்லஸ் பேபேஜ் காலத்து டப்பா கம்ப்யூட்டர்களும்தான் என்னும் பட்சத்தில், குறைந்தது ஒரு கட்டுரை அளவிலாவது பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படுவதைப் பரம சாதுவான பாராகவன்களாலும் தவிர்க்க முடியாது என்பதே இக்கதை உணர்த்தும் நீதியாகும்.

[நன்றி: புதிய தலைமுறை]

1 comments:

haa haaa itellom parthal, PAN um vendam IT return um venamnu oda than thonum. katta panjayathu panravan, kalla saarayam kacharavan ellom naatule vari katikita irukkan? uzhaichu sambadhikara appavi vari kattuvaan... antha panathai eduthu arasaangam kalla ssrayam kacharavanukellom ilavasa arisi, mannennai, kothumai ellom poduvanga... thangala daa saamy!

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More