Blogroll

Sunday, October 30, 2011

மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுவது எப்படி?




இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்.... அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!

நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.

ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட வேண்டாம். மாமியார் என்றதும் உம்.. என்ற முகத்துடன் கடுகடுவென்று பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.

பொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின் வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவன் வந்திருக்க முடியுமா. உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.

அன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள் போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக் கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ் பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம் நடக்கிறதா உங்கள் மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர் உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமக மருமக தான். எனக்கு பிடித்த உணவை சமைத்திருக்கிறாள் என்று பெருமைபட்டுக் கொள்வார்.

நேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, சரியான பிராடு என்று பெயர் வாங்கிவிடுவீர்கள்.

மாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். அவர் கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா? அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு செய்தீர்கள் என்றால் என் மருமகள் நான் கோபப்பட்டு வெடுக்குன்னு பேசியும் கூட பொறுமையாக இருந்தா ச்சே.. ஏன்டா கோபப்பட்டோம்னு ஆகிடுச்சு என்று அவர் வயதை ஒத்தவர்களிடம் சொல்வார்.

பிறகு என்ன மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More