Blogroll

Wednesday, October 26, 2011

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை



வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்கவேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள், கூறியிருக்கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.

உடம்பில் நோய் எதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன. உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சிரிக்கும் போது அந்த ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின்&ஏ’ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.

ரத்தம் தூய்மையாகும்

ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிப்பதானாலேயே மாரடைப்பு மற்றும் இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அபாயகரமான நோய்கள் தோன்றாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டு சிரிக்க வேண்டும்.

சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால், ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது. மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.

அதிகரிக்கும் நட்பு வட்டம்

சிரிப்பில் பலவகை இருந்தாலும் மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தனையை தூண்டக்கூடியதாகவும் அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்

புன்னகையால் மலரும் மனம்

புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம். சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை கண்கூடாக காணலாம்.

மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ புளிப்போ உவர்ப்போ கார்ப்போ துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள். சிரிக்கச்சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மலர்ந்து மணம் வீசத் தொடங்கும் என்பது நிதர்சனமான உண்மை

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More