சராசரியாக வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையைப் போலவே இங்கும்.. எழும்புவதும், வேலை செய்வதும்.. இல்லம் திரும்புவதும்..உண்பதுவும் உறங்குவதும்.. (சில சமயங்களில் அப்பா வேறு சமைப்பதுவும் நான் வயிறு புடைக்க தின்பதுவும் வேறு கதை) வடிவேலு சொன்னது உண்மைத்தான்.. வீட்டில் வெட்டியாய் இருந்த சுகமே சுகம்.
முன்பெல்லாம் நிறைய மனிதர்களுடன் பழகிவிட்டிருந்தேன்.. இப்பொழுது எப்பக்கம் திரும்பினாலும் வெறும் இயந்திரங்களையே காண முடிகிறது. ஏதொ அளவுகோலை இதயத்திலும் இதழ்களிலும் பொருத்திக்கொண்டு அளவாய் பழகுவதும் அளவாய் சிரிப்பதையும் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை.! எந்த சந்தையிலோ மனிதம் நல்ல விலைக்குப் போகிறது போலும். அனைவரும் குறைந்த விலைக்கு அதனை விற்றுவிட்டு வெறும் ஜடங்களாக திரிகின்றனர். மேலும் பலர், அதனை விற்கவும் இயலாமல் வைத்துக்கொள்ளவும் இயலாமல் தள்ளாடுகின்றனர்.
எல்லாம் வணிக மயமானதிற்குப் பின், அன்புக்கு இங்கென்ன வேலை? அதுவும் தலைத்தெறிக்க ஓட்டம் கண்டுவிட்டதோ என்னமோ?? நியூட்டனின் மூன்றாம் விதிக்கொப்பத்தானே இங்கு அன்பும் காதலும் அமலாக்கப்படுத்தப்படுகின்றன?
தனிமைத்தான் இன்று ஒரு தனி மனிதனின் அளவு கடந்த தூய அமைதியைத் தரவல்லது என எண்ணத் தோன்றுகிறது. தனிமைத்தான் எவருடைய அன்பையும், கருத்துப் பகிர்வையும், ஈர்ப்பையும் எதிர்பாராமல் ஒரு மனிதனை நிம்மதியான வாழ்வினை வாழ்வதற்கு வகைச்செய்கின்றது போலும்.
இங்கு காதலையும், அன்பையும், நேர்மையையும், இன்னபிற உணர்வுகளையும் குறை சொல்வது எனது நோக்கமில்லை. உணர்வுகள் மனிதமின்றி உயிர்பெறுவதற்க்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா என்ன?
'நான் யார்' என்ற தேடல் நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது? ஆனால், 'அவர் யார்?, அவள் யார்? என்ற தேடல்கள் மட்டும் ஏன் எல்லா உள்ளங்களிலும் குடிக்கொண்டிருக்கின்றன?? நம்மில் எத்தனை பேர் நமக்காக வாழ்கிறோம். சரி, இத்தனை பெரிய கேள்வியைத் தவிர்த்துவிட்டு, எளியதொரு கேள்விக்கு வருவோம். நம்மில் எத்தனை பேர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்..?? இக்கேள்விக்கு பதில் சொல்லவியலாமல் தலையினை மெல்ல அசைத்து, உதடுகளை கோணலாக சிரிக்கும்படி பணிக்கிறீர்களா?? ம்ம்ம், நானும் அப்படியே..!
0 comments:
Post a Comment