இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.இதே போன்று துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கு அர்ஜுனா விருதும், துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்படவுள்ளது. ஜாகீர்கான் இந்த ஆண்டு நடந்து முடிந்த கிரிக்கட் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடினார். இதையடுத்து இந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு ஜாகீரின் பெயரை பி.சி.சி.ஐ. பரிந்துரைத்தது. அதன் பரிந்துரையை ஏற்று தற்போது ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவிருக்கிறது. ஜாகீர் கடந்த 2000 ம் ஆண்டு தான் முதன்முதலாக சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். அர்ஜுனா விருது பெறும் 44 வது கிரிக்கட் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். தற்போது இந்திய அணியில் இருக்கும் சச்சின், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் அர்ஜுனா விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் இன்னொரு உயரிய விருதான ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ககன் நரங் கடந்த 2010 ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
0 comments:
Post a Comment