மழை வருவதற்கு முன் பொழுது.
உன்னுடன் நான் நடக்கிறேன்.
எதிர்ப்படும் எல்லோருமே
தேவதைகளாய்த் தெரிகின்றனர்.
பின்வரும் எல்லோருமே
அட்சதை சொரிகின்றனர்.
"குடை இல்லையா..?"
எனக்கேட்கிறாய்.
தனித்தொலிக்கிறது உனது குரல்
இனிப்புவழியும் கட்டளைகளை
உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.
ஓடிச்சென்று ஒரு குடையினைக்
கொண்டு வருகிறேன்.
மெல்லத் தூறல் தொடங்குகிறது.
பள்ளி சென்று வீடு மீளும்
குழந்தையொன்றின்
கைகளில் குடை திணிக்கிறாய்.
சாலை முடிவுவரை
திரும்பிப்பார்த்துக் கைகாட்டியபடியே
செல்லும் குழந்தையை
புன்னகைத்துக்கொண்டே
வழியனுப்புகிறாய்.
கோபமறைத்த குரலில்
சொல்கிறேன்.
"குடை உனக்கென்று தானே கொணர்ந்தேன்."
என்று.
சிரித்துக்கொண்டே கேட்கிறாய்..
அந்தக் குழந்தை நானில்லையா?
என்று.
பின் மௌனமாய் முனகுகிறேன்.
"நன்றாக நனைந்துவிட்டாயே?"
என்று.
இடுப்பில் கைகளை இருத்திக் கொண்டு
முறைத்தபடி கேட்கிறாய்.
"அந்த மழை நீயில்லையா?"
என்று.
0 comments:
Post a Comment